ஒரு குட்டி பூர்ஷுவாவின் அனுபவம்
1978-79 ல் தான் எனக்கு முதல்முதலாக மார்க்ஸீய தத்துவத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘அந்நியமாதல்’ என்ற புஸ்தகத்தைப் படிக்காதவன் அறிவுஜீவியே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் அதை நான் இரண்டே நாளில் படித்து முடித்து அறிவுஜீவியானேன்.அப்போது சோவியத் யூனியன் சிதறுண்டு போயிருக்கவில்லை. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் ரஷ்ய மார்க்ஸிஸ்ட், சீன மார்க்ஸிஸ்ட், அல்பேனிய மார்க்ஸிஸ்ட், கிராம்ஸி ஆதரவாளர்கள், அல்தூஸர், சார்த்தர் ஆதரவாளர்கள் என்று ஏகப்பட்ட மார்க்ஸிஸ்ட்கள் திரிந்து கொண்டிருந்தனர். நான் ஒரு குட்டி பூர்ஷûவா ஆக இருந்ததால் என்மீது எந்த மார்க்ஸீய முத்திரையும் விழவில்லை. ஆனால், விதி யாரை விட்டது?
எழுபதுகளில் சென்னை தி. நகர், மகாலட்சுமி தெருவிலிருந்து ‘பிரக்ஞை’ என்ற சிறு பத்திரிகை வெளிவந்தது. தீபம், கணையாழி, கசடதபற போன்ற பத்திரிகைகளைப் போல் பெரிய சைஸில் ‘பிரக்ஞை’ வெளிவந்தது. நண்பர் ரவிஷங்கர் வீடுதான் பிரக்ஞை அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. 1973 ஜூனில் நான் சென்னைக்கு வந்தது முதலே ரவிஷங்கர், வீராச்சாமி (ரங்கராஜன்), ரவீந்திரன் போன்ற நண்பர்கள் எல்லோரையும் பழக்கம்.
1976 ஜூனில் ‘துக்ளக்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் செல்லுமிடங்களில் ஒன்றாக ரவிஷங்கரின் வீடு இருந்தது. ரங்கராஜன் என்ற வீராச்சாமி மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே துர்க்காராம் தெருவில் குடியிருந்து வந்தார். தினசரி மாலை வீராச்சாமி, ரவிஷங்கரின் வீட்டுக்கு வந்து விடுவார். வீராச்சாமியுடன் எழுத்தாளர் பூமணியும் அவரது அறையிலேயே தங்கியிருந்தார்.
ஒருநாள் ரவிஷங்கர் வீட்டுக்குச் சென்றிருந்த போது அவர் ஒரு தகவலைச் சொன்னார். ‘அடுத்த வாரம் திங்கட்கிழமையிலே இருந்து தினசரி சாயந்திரம் ஒருத்தர் வந்து மார்க்ஸீய வகுப்பெடுக்கப் போகிறார். நீங்களும் வாங்க.’
ஊரில், பாளையங்கோட்டையில் இருந்தபோது பேராசிரியர் நா. வானமாமலை, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்கிருஷ்ணன் (நெல்லைச் செல்வன்) போன்ற இடதுசாரி நண்பர்களுடன் நட்பிருந்தாலும் மார்க்ஸீயத்தைப் பற்றி ‘அ’னா, ‘ஆ’வன்னா கூடத் தெரியாது. மேலும், நான் ஒரு புஸ்தகக் கோட்டி (பைத்தியம்). மார்க்ஸீயம் படிக்க ஒரு வாய்ப்பு வருகிறது என்றதும், ரவிஷங்கரிடம், ‘வருகிறேன்’ என்று ஒத்துக்கொண்டுவிட்டேன்.
குறிப்பிட்ட தினத்தில் மாலையில் ரவிஷங்கர் வீட்டு மாடியில் ரவிஷங்கர், வீராச்சாமி, பூமணி, பா. ஜெயப்பிரகாசம், லயனல், ரகு போன்ற நண்பர்களுடன் நானும் ஆஜராகி இருந்தேன். ஐந்தரை மணி சுமாருக்கு குள்ளமான ஒருவர் தோளில் ஜோல்னாப் பை சகிதம் வந்தார். அவர் பெயர் கண்ணன் என்று அறிமுகப்படுத்தினார்கள். பீடியை எடுத்துக் கண்ணன் பற்ற வைத்தார். நானும் அவருடன் சேர்ந்து பீடி குடித்தேன். 1978ல் பீடி, ஜோல்னாப் பை, முடிந்தால் தாடி வைத்துக் கொள்வது இவையெல்லாம் அறிவுஜீவிகளின் அடையாளமாக இருந்தன.
என்னிடமும் இவையெல்லாம் இருந்தன.
கண்ணன், தினசரி ஒருமணி நேரம் வகுப்பெடுத்தார். அவர், இந்த வகுப்பு ரகசியமானது, யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று வேறு அடிக்கடி சொல்லி வந்தார். எனக்குப் பயமாகி விட்டது. நண்பர் ரகு அந்த ரகசியத்துக்குப் பயந்து, வகுப்புக்கு வருவதையே நிறுத்தி விட்டார். ஒருநாள் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, மாடிக்கு ரவிஷங்கரைத் தேடிக் கொண்டு சிவகுமார் வந்துவிட்டான் (சிவகுமார், பின்னர் தினமணியில் பணி புரிந்தான்). அவனைப் பார்த்ததும் கண்ணன் பேசுவதை நிறுத்தி விட்டார். அவனை அங்கிருந்து வெளியேற்றினால்தான் வகுப்பெடுக்க முடியும் என்று கண்ணன்
சொல்லி விட்டார்.
அவனிடம் பேசிச் சமாளித்து, ரவிஷங்கர் அவனைக் கீழே அனுப்பி வைத்தார். அவன் சென்ற பிறகு கண்ணன் சிவகுமாரை ‘அவன் ஒரு உளவாளி’ என்றார். சிவகுமாரை எனக்கு 1973 முதலே பழக்கம். அவன் வேலையில்லாதவன் என்பது தெரியும். ஆனால், அவன் எப்போது சி.ஐ.டி.யானான் என்று எழுதவில்லை. போயும் போயும் இந்தச் சிவகுமாரை உளவாளி, சி.ஐ.டி. என்கிறாரே என்றிருந்தது.
சிவகுமார் உளவாளியாக்கப்பட்டதாவது பரவாயில்லை. ஒருநாள் ரவிஷங்கர் வீட்டில் அம்பையைப் பார்த்தேன். அம்பையை அதற்கு முன்பே பழக்கம். அப்போது அம்பை டெல்லியில் இருந்தார். சென்னை வந்தால் ரவிஷங்கர் வீட்டுக்கு வராமலிருக்க மாட்டார். அப்படித்தான் அன்றும் அம்பை வந்திருந்தார். ரவிஷங்கர் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அம்பை அந்தப் பிச்சைக்காரனைப் பற்றி எங்களிடம், ‘அவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரித் தெரியலே. யாரோ சி.ஐ.டி. மாதிரி இருக்கு…’ என்று சொன்னார்.
நான் ஏற்கெனவே ஜேம்ஸ்பாண்ட் படங்களையும், ஹிட்ச்காக்கின் மர்மப் படங்களையும் பார்த்து மனம் தோய்ந்து போனவன். அதனால் அம்பை சொன்னதை நம்பாமலிருக்க முடியவில்லை. சிவகுமார்தான் ஒரு உளவாளி என்றால், இந்தத் தெருப் பிச்சைக்காரன் வடிவில் இன்னொரு உளவாளியா? மார்க்ஸீயம் கற்பது அவ்வளவு அரசாங்க விரோதமான காரியமா என்று நினைத்தேன். ரவிஷங்கரிடம் இதைப் பற்றிப் பேசியபோது, அவர் சிரித்துக்கொண்டே ‘அதெல்லாம் ஒண்ணுமில்லே வண்ணநிலவன்…’ என்றார்.
கண்ணன் மாதாமாதம் எங்களிடம் ‘லெவி’ வாங்குவார். ‘லெவி’ என்றால் ஏதோ நம்மால் இயன்ற பணத்தைக் கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்பது என்றார். என்னுடைய மாதச் சம்பளமே அப்போது 350 ரூபாய் தான். இதில் நானும், என் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உயிர் வாழ்ந்தோம். இதில் லெவிக்கெல்லாம் நான் எங்கே போவது? என்றாலும், நானும் ஆளோடு ஆளாக மாதாமாதம் 10 ரூபாய் லெவி கொடுத்தேன். பூமணி, ஜெயப்பிரகாசம், வீராச்சாமி, ரவிஷங்கர் எல்லாம் நிறையவே லெவி கொடுத்தார்கள். புராணப் பிரவசனம் செய்கிறவர்களுக்காகப் பிரவசனம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒருவர் தட்டை ஏந்தி வசூல் செய்வார். அந்த மாதிரி இதுவும் ஒரு வசூல் போல என்று நினைத்தேன்.
கண்ணன் ரவிஷங்கர் வீட்டுக்கு வருவது, அங்கிருந்து செல்வது எல்லாமே பெரிய ரகசிய விஸிட் போலத்தான் இருக்கும். சில நாட்கள் திடீரென்று தன் ஜோல்னாப் பையிலிருந்து ஏழெட்டு பக்கங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை எடுத்து ரகசியமாக எல்லோருக்கும் வழங்குவார். இப்படி கண்ணனின் காரியங்கள் எல்லாமே ஒரே ரகசியமாக இருந்தன.
வகுப்பு முடிந்துவிட்டது. கண்ணன் ரகசியமாக லெவி வசூலிப்பதும், துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பதும் தொடர்ந்தது. ஒருநாள் வீராச்சாமி எங்களையெல்லாம் அழைத்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை சிந்தாதரிப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளியில் நமது செயல்திட்டத்தை வகுப்பதற்காகக் கூடுகிறோம், காலை பத்து மணிக்கு வந்துவிடுங்கள் என்றார்.
கண்ணன் ஏதோ கட்சிக்கு லெவி என்றார். அது என்ன கட்சி, அதன் தலைமையகம் எங்கே இருக்கிறது, அதன் தலைவர் யார் என்றெல்லாம் தெரியாமலே லெவி கொடுத்தோம். இப்போது வீராச்சாமி செயல்திட்டம் என்கிறாரே. என்ன செயல், என்ன திட்டம் என்று புரியவில்லை. என்றாலும், அந்தக் கூட்டத்துக்குப் போனேன். மாடியில் ஒரு வகுப்பறையில் சுமார் 40 பேர் இருந்தார்கள். தீர்மானம் மாதிரி வரிசையாக எழுதப்பட்ட சில வாசகங்கள் அடங்கிய தாளை எல்லோருக்கும் கொடுத்தார்கள். அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம், வர்க்கம் என்று கண்ணன் வகுப்பெடுத்தபோது சொன்ன சொற்களாகவே அவை இருந்தன. மதியத்திற்கு மேலும் கூட்டம் தொடர்ந்தது. எனக்குப் போரடித்தது. அதனால் நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்.
அந்தக் கூட்டத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைக்கத் தீர்மானமாகி முடிவெடுக்கப்பட்டது. வீராச்சாமியின் நண்பர்கள் இதை உருவாக்கினார்கள். வீராச்சாமிக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. வீராச்சாமிதான் ஒருநாள் ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை பற்றியும் பேசினார். புதிய ஜனநாயகம் பத்திரிகையின் விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவை வறட்டுத்தனமாக இருந்தன.
பிறகு பா. ஜெயப்பிரகாசம் சில நண்பர்களுடன் புதிய ஜனநாயகத்தைப் போல ‘மன ஓசை’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஜெயப்பிரகாசம், பூமணி எல்லாம் மன ஓசையில் எழுதினார்கள். நான் புதிய ஜனநாயகத்திலும் எழுதவில்லை, மன ஓசையிலும் எழுதவில்லை. என்னுடைய இயல்பு, மனப்போக்குக்கு அவை ஒத்து வரவில்லை. ‘மன ஓசை’ இப்போது வெளிவரவில்லை. புதிய ஜனநாயகம் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ம.க.இ.க. இப்போது தமிழகமறிந்த ஒரு சிறு இயக்கமாகக் காட்சியளிக்கிறது. எங்களுக்கு வகுப்பெடுத்த கண்ணனை அதன்பிறகு நான் இன்று வரை சந்திக்கவே இல்லை. நானொரு குட்டி பூர்ஷுவா. அதனால்தான் ம.க.இ.க.வில் சேரவில்லை என்று நினைக்கிறேன்.
thanks to வண்ணநிலவன்/ஆழம்
No comments:
Post a Comment