மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் எனக் கூறப்படுகிறது. இது
அகில உலக உழைப்பாளர் தினமா? இது எப்படி ஆரம்பித்தது ?
இதன் வேர்களை நாம் அலசுவோம்.
வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886ல் மே 1ம் தேதி தொடங்கப்பட்டது.
ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை
நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு வெடிகுண்டு
தாக்குதல் சிகாகோவில் நடந்தது. அதில் காவல்துறையினர், தொழிலாளர் உட்பட 12
பேர் இறந்தனர். இதன் பின்விளைவாக தொழிலாளர்களின் தினசரி வேலைக் கால அளவு
நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நாளை
ஐரோப்பிய அமெரிக்க இடதுசாரி இயக்கங்கள் உலகத்
தொழிலாளர் தினமாக அனுசரிக்கத் தொடங்கின. சோவியத் அரசு உருவான போது
அவர்களுக்கு வருடாந்திர சடங்கோற்சவங்கள் தேவைப்பட்டன. அதற்காகத் தொழிலாளர்
தினமாக அனுசரிக்கப்பட்டது மே 1. உலகெங்கும் உள்ள சோவியத் தொண்டரடிப்பொடிகள்
அதை அப்படியே சிரமேற்கொண்டு தங்கள் நாடுகளில் செயல்படுத்த ஆரம்பித்தனர்.
இதுதான் மே ஒன்று
சர்வ தேசத் தொழிலாளர் தினமான கதை.
இக்கதையின் ஊடே ஓடும் ஐரோப்பிய மையப் போக்கினை அதிகம் விளக்கத் தேவையில்லை.
தொழிலாளர் தினமாகச் சொல்லப்படும் மே 1 அது தோன்றிய அமெரிக்காவில் இன்று
பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டது.$ அந்தக் கொண்டாட்டத்திற்கு மாறாக
வேறு பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவை அனைத்தும் கிறுத்துவத்துக்கு
முந்தைய பேகெனீயக் (Pagan) கொண்டாட்டங்கள். இந்த பேகெனீய மே 1
கொண்டாட்டங்கள் பல தெய்வ வணக்கம் செய்கிற, செழுமையையும் இயற்கை
மேன்மையையும் கொண்டாடுகிற நிகழ்வுகளாக இருக்கின்றன.
வரலாறு சொல்லும் இந்த உண்மை ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாளர் தினத்தை
தொழிலாளர்களுக்காக உண்மையாகக் கொண்டாடத்தான் முடியவில்லை. ஆனால், தொழிலாளர்
தினம் அனுசரிக்கும்
ஐரோப்பிய மையவாதப் பார்வை கொண்டவர்களால் அவர்கள் கூறிய பாட்டாளிகளின் பொன்னுலகையாவது கொண்டுவர முடிந்ததா ?
இல்லை. அப்படிப்பட்ட பொன்னுலகம் இன்னமும் நம்பிக்கையில் உயிர்வாழும்
வெற்றுக் கனவாகவே இருக்கிறது. ஏனெனில், இந்த ஐரோப்பிய மையவாதப் பார்வை
கொண்டவர்கள் ஆலைத் தொழிலாளர்களை உன்னத போராட்ட குணம்கொண்ட மேன்மக்களாக
சித்தரித்தனர். அதே சமயம் மண் சார்ந்த, விவசாயம் சார்ந்த மக்களைப்
பிற்போக்கானவர்களாக அவர்கள் கருதினர். அதனால், அவர்கள் ஆண்ட நாடுகளில்
எல்லாம் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடின.
உதாரணமாக,
பாட்டாளிகளின் சுவர்க்கமான சீனாவை எடுத்துக் கொள்வோம். மா சேதுங்கின் “மகா
முன்னகர்தல்” (Great Leap Forward) பெரும் பஞ்சத்தைச் சீனாவில்
உருவாக்கியது. 1.4 கோடிகளிலிருந்து 1.6 கோடிகள்வரை மக்கள் இந்த பஞ்சத்தில்
இறந்திருக்க வேண்டும் என 1980ல் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸு
ஸுங்காய் வெளியிட்ட புள்ளியறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சீனப் பொருளாதார நிபுணரான அவர் 1981ல் இன்னும் அதிகமான புள்ளி விவரங்களை
வெளியிட்டார். சீனா முன்னேற்றத்துக்கு கொடுத்த “இரத்தப்பணம்” என அவர் அதை
விவரித்தார். இதன்படி, புள்ளி விவரங்கள் சொல்லுவதைக் காட்டிலும் இன்னும்
அதிகமாக மக்கள் இறந்திருக்க வேண்டும். 1960ஆம் ஆண்டில் மட்டும் 90 இலட்சம்
மக்கள் இறந்திருந்தார்கள் என அவர் தெரிவித்தார். இன்றைக்குச் சீனா வெளியில்
காட்டும் ‘
சாதனைகள்‘ அனைத்தும் இந்த கோடிக்கணக்கான பிணங்களின் மீது உருவானவைதான்.
இந்த
மானுட இழப்பிற்கான காரணத்தை நாம் உணர்ந்து கொள்வது மிக அவசியம். சீனப்
‘புரட்சி’ ஏற்பட்ட போது ஒரே இரவில், சீனா முழுவதையும், கிராமப்புற விவசாய
பொருளாதாரத்திலிருந்து தொழில்மயமான ஆலை உற்பத்தி பொருளாதாரத்துக்கு
முற்றிலும் மாற்றவேண்டும் என விரும்பினார் மா சேதுங். அதனால், பேகென்களைப்
போல மண் சார்ந்த, கிராமங்களில் நடைபெறும் விவசாயத்தைச் செய்யாமல், ஐரோப்பிய
மையவாதப் பார்வையான சோஷலிச சுவர்க்கம் நோக்கும், நகரம் நோக்கிய ஆலைகள்
சார்ந்த வேலைகளை மக்கள் செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு என்ன? மா சேதுங்
எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றமா ? இல்லை. உணவுத் தட்டுப்பாடு.
முதல் பஞ்சம் ஹுனான் பிரதேசத்தில் 40 இலட்சம் மக்களை காவு வாங்கியது.
பஞ்சத்தின் உச்சத்தில் தவித்த கிராமப்புற மக்களுக்கு பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தின் கட்சி பிரதிநிதிகள் அதிரடி கட்டளைகளைக் கொடுத்தனர்:
மக்கள் தங்கள் சொந்த வீட்டில் நடக்கும் மரணங்களைக் கூட வெளியே தெரிவிக்கக் கூடாது.
அவ்வாறு தெரிவிப்பது தேசத்தின் முன்னேற்றத்தின் உத்வேகத்துக்கு ஊறுவிளைவிக்கும்.
இந்த ‘
அறிவுரைகள்‘
உள்நாட்டில் செய்யப்பட்ட பிரச்சாரங்கள். முற்றிலும் வேறுபட்ட பிரச்சாரம்
வெளியுலகிற்குச் செய்யப்பட்டது. இதன்படி பஞ்சத்தின் உச்சக்கால
கட்டத்தில்கூட (1959ல்) ஒரு சீனனுக்கு 1050 கிலோ தானியங்கள் கிடைக்கும் என
வெளியுலகுக்குச் சொல்லப்பட்டது.
ஆனால், சீன அரசுக் கிட்டங்கிகளில் இருந்த தானியங்களின் அளவு மிக மிகக்
குறைவு. அங்கே உண்மையில் இருந்த தானியங்கள் உண்மையிலேயே விநியோகிக்கப்பட்டு
இருந்தால் ஒரு சீனனுக்கு 186.5 கிலோக்கள் மட்டுமே கிடைத்திருக்கும்.
இருந்தாலும், இந்த கொடூர பஞ்சங்களால் பொய்யான நம்பிக்கை உடைபட
கம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லை. கிராமம் சார்ந்த பேகென்களின் தொழிலான
விவசாயத்தைவிட, நகரம் சார்ந்த ஐரோப்பிய மைய வாதப் பார்வை முன்வைக்கும்,
ஆலைகள் சார்ந்த தொழில்களே உயர்ந்தவை எனக் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக
நம்பினர். தான் தோற்றுவித்த மூடநம்பிக்கைகளை உறுதியாக்க கம்யூனிசம்
முனைந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கம்யூனிசப் பிரதிநிதிகள் தங்கள் நாடு
ஆசிய விவசாய நாடு என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட்டனர். அத்தகைய தாழ்வான
நிலையிலிருந்து தாங்கள் மீண்டு வந்துவிட்டதாக அவர்கள் பிரகடனப்படுத்தினர்.
1950களின் கதை மட்டுமல்ல இது. மாவோவின் “நெடும் பீடுநடை” (Long March),
பீடைநடையாக இன்றைக்கும் சீன கிராமப்புறங்களில் பிணமருந்திக் கொண்டுதான்
இருக்கிறது. தொடர்ந்து பிணமருந்திக் கொண்டு இருக்கும் இந்தக்
காலத்திலும்கூட, இந்தப் பீடைநடையின் உண்மைத் தன்மையை மறைத்து, அது குறித்த
உயர்வான பிம்பங்களை உருவாக்கும் உத்திகளை தொடர்ந்து கம்யூனிசமும் செய்து
வருகிறது. பீடைநடையும் பிரச்சாரமும் கைகோர்த்து பவனி வருகின்றன.
உதாரணமாக, ஜனவரி 26, 1995ல் “நெடும் பீடு நடை-2″ எனும் பெயர்
வைக்கப்பட்ட ராக்கெட் ஒன்று சீனாவிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
சில கணங்களில் அது அருகாமையிலிருந்த கிராமங்களின் மீது விழுந்தது.
பிப்ரவரி 14, 1996ல் செலுத்தப்பட்ட அடுத்த பீடுநடை இதே போல, அதுவும், கிராமங்களின் மீதுதான் விழுந்தது.
மா சேதுங் ஆரம்பித்த “பெரும் பீடு நடை” கிராமங்களை அழித்தது போல, அதே
பெயரில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் கூட, அதே போலக் கிராமங்களையே அழித்தது
வேதனையான ஒற்றுமை. ஆனால், இந்த உண்மை வெளியே தெரியலாமா ?
இந்த விண்ணூர்தி செலுத்தப்படுவதைக் காண வந்திருந்த வெளிநாட்டு
பத்திரிகையாளர்கள் சீன இராணுவத்தால் ஐந்து மணிநேரம் அடைத்து
வைக்கப்பட்டனர். அழிக்கப்பட்ட கிராமங்கள் படமெடுக்கப்படுவது தடை
செய்யப்பட்டது. இந்த விண்ணூர்திகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏவல் செய்ய
உருவாக்கப்பட்டவை. எனவே, மேற்கத்திய நாடுகளும் இதைப் பெரும் பிரச்சினை
ஆக்கவில்லை. சீன விண்ணூர்திக்காக எத்தனை கிராமவாசிகள் பலியானார்கள் என்பது
உலகுக்குத் தெரியவே போவதில்லை.
உண்மையும் உயிர்களும் பலியாவது கம்யூனிசம் எனும் சித்தாந்தத்திற்குக்
கவலைக்குரியவை இல்லை. கம்யூனிச சித்தாந்தத்தில் உயிர்கள் முக்கியமானவையும்
இல்லை. அதிலும் ஒரு விவசாயியின் உயிருக்கு மதிப்பு கிடையாது. தொடக்க
கட்டங்களில் மட்டுமே, புரட்சிகளில் ஈடுபடத் தேவைப்படும் மக்கள் மந்தைக்காக
மட்டுமே, உழவர்கள் மார்க்சியத்தில் பேசப்படுவார்கள்.
‘
புரட்சிக்கு பிறகு ஏற்படும் பொன்னுலகில்‘ உழைக்கும் பாட்டாளி
வர்க்கமென்பது நகர்ப்புற ஆலைத் தொழிலாளிகள் மட்டுமே. வேறு வழியில்லாமல்
பொறுத்துக் கொள்ளப்பட வேண்டிய வெறும் எரிச்சல்கள் மட்டுமே கிராமப்புற
விவசாயிகள். அவர்களைக் காவு கொடுப்பதும் பூச்சிகளைப் போல அழித்தொழிப்பதும்
மார்க்சிய சித்தாந்த வாதிகளுக்கு பிரச்சினையே இல்லை. இந்த மனோபாவம்தான்,
விவசாயிகளுக்குச் சம்பந்தம் இல்லாத ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமான
மே 1ஐ “உலக உழைப்பாளிகள் தினம்” என அறிவிப்பதிலும் உள்ளது.
மே
1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி
அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும்
ஒரு நாடக தினமே மே 1.
ஆனால், நமது மனசாட்சி இந்தக் கேள்விகளைக் கேட்கக்கூடும்.
தொழிலாளர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா ? அவர்கள் ஒரு தேசத்தின்
முதுகெலும்பு இல்லையா ?
ஆம். அவர்கள் நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள்.
ஆனால், நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல்
உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல்,
இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட
வேண்டும்.
அப்படிப்பட்ட
ஒரு தினம் ஐரோப்பிய மையவாதம் சார்ந்த, பேகெனிய மரபுகளை ஒதுக்குகிற,
மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தொழிலாளர் தினமாக இருக்க முடியாது. ஆனால்,
கிராமங்களை நோக்கிய, பேகனீய மரபு கொண்ட, மண் சார்ந்த, பன்மையில் ஒருமை
காணுகிற ஒரு இந்துத்துவ கொண்டாட்ட தினமாக மட்டுமே அப்படிப்பட்ட ஒரு தினம்
இருக்க முடியும்.
ஏனெனில், மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் நம்
தேசத்தின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு
இருக்கிறது.
அங்கே தொழில் என்பது ஒரு சாபம். வேறுவழியின்றி மேற்கொள்ளப்படும் ஒரு
கடின சூழல். அதிலிருந்து பெறும் விடுப்பே சந்தோஷம். ஏன் இப்படி இருக்கிறது ?
ஏனெனில், மேற்கத்திய இறையியல் தொழில் செய்வதை, உழைப்பதை ஒரு சாபமாகக்
கருதுகிறது. மேற்கத்திய இறையியல் காட்டும் சுவர்க்கத்தில் உழைப்பே
கிடையாது.
உழைப்பின்றி
சர்வமும் கிடைக்க மனிதன் வாழ்ந்த வாழ்வே பொன்னுலகாக வர்ணிக்கப்படும் ஏடன்
தோட்டம். அத்தகைய வாழ்வை மனிதர்களுக்குத் தடை செய்து, உழைத்துப்
பிழைக்கும்படி சபித்ததுதான் ஆபிரகாமிய ஆண்டவன் மனிதருக்குத் தந்த தண்டனை.
அந்த உழைப்பு எனும் தண்டனையை ஐரோப்பிய மையவாதப் பார்வையால் எப்படிக்
கொண்டாட முடியும் ?
ஆனால், பாரதத்திலோ உழைப்பு என்பது ஒரு படைப்பூக்கச் செயல். இறைவனே ஆதி தொழிலாளிதான். விஸ்வகர்மா எனும் முதல் தொழிலாளி.
தொழில் என்பது இங்கு வழிபாடு. உழைப்பு ஒரு சாதனை. தன் உழைப்பால் உணவு
உற்பத்தி செய்து, வியர்வையால் உணவை இங்குள்ளோர் உருவாக்குவர். அங்கனம்
உருவாக்கிய உணவை நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல்
உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல்,
பகுத்துண்பதே பண்பாடு. கிராமத்து மனிதர்களைக் கொல்லாமல், பல்லுயிர்
ஓம்புதல் மனிதனை வானுறையும் தெய்வத்துள் சேர்க்கும் ஆத்மசாதனை.
இந்த வாழ்க்கை முறையின் தொன்ம வடிவுதான் விஸ்வகர்மா.
மண்பாண்டமும் மரச்சட்டகமும் செய்யும் நம் தொழிலாளர்கள், எதையும் தன்
வியர்வையால் உருவாக்கும் நம் தொழிலாளர்கள் விஸ்வகர்மாவின் உயிர் வடிவங்கள்.
அவர்களை வணங்குவோம். அவர்களாக விளங்குவோம்.
வையகம் மேன்மையுற சமுதாயம் அனைத்தும் இன்புற உலகத் தொழிலாளர்களே உலகை ஒன்றுபடுத்துவோம்.
இவ்வருடத்திய உழைப்பாளர் தினம் நமக்குப் பழக்கமான
கிரிகேரியன் நாட்காட்டியின்படி செப்டம்பர் 17 அன்று (மே 1 அல்ல) வருகிறது.
அதாவது, வானவியல் வளர்த்த விவசாயிகளான நமது மூதாதையர் பின்பற்றிய
பஞ்சாங்கத்தின்படி, நமது தொழிலாளர் தினம் கன்யா சங்கிராந்தி அன்று
வருகிறது. அதற்கு நம் முன்னோர் இட்ட பெயர்: விஸ்வகர்மா ஜெயந்தி.
$ செப்டம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமையையே உழைப்பாளர் நாளாக அமெரிக்கா அனுசரிக்கிறது.
courtsy
-
அரவிந்தன் நீலகண்டன்
மேலதிகம் அறிய:
- சீனப்புரட்சியின் உணவுப்பஞ்சம் குறித்து: World Disasters Report, DIANE Publishing, 1995, பக்.34
- Rajani Kannepalli Kanth, Paradigms in economic development: classic
perspectives, critiques, and reflections, M.E. Sharpe, 1994 பக்.224.
இந்த நூல் தரமான அடிப்படை சத்துணவு கிடைப்பதில் இந்தியர்களுக்கும்
சீனர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றித் தெரிவிக்கிறது. இதன்படி,
அனைவருக்கும் சத்துணவு அளிப்பதில் இந்தியர்களின் முன்னேற்றம் சீனாவைவிட
வேகம் குறைவாக இருக்கிறது. ஆனால், சீனாவில் நிலவிவருவதைப் போன்ற பஞ்சம்
சுதந்திர இந்தியாவில் ஏற்படவேயில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.)
- புகையுடன் மக்களின் இரத்தத்தையும் உறிஞ்சி விண்ணில் பறக்கும் பாட்டாளி வர்க்க விண்ணூர்திகள் – வீடியோ
- பாரதிய மஸ்தூர் சங்க இணையதளம்
- விஸ்வகர்மா ஜெயந்தி குறித்து